மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பு கிழிவு என்றால் என்ன? எதனால் இது ஏற்படுகிறது?

0
6857
Meniscal Tears
Meniscal Tears

மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பு கிழிவு என்றால் என்ன?

தொடை எலும்பு (நம் தொடையில் அமைந்துள்ள ஒரே எலும்பு மற்றும் உடலின் மிக நீண்ட எலும்பு) மற்றும் கணுக்கால் உள் எலும்பு (Tibia) (Shin Bone) இவற்றிற்கு இடையே உள்ள மெல்லிய குருத்தெலும்புகளான. (அரை மதிக் குருத்து) மெனிஸ்கியில் ஏற்படும் காயத்தை மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பு கிழிவு என்கிறோம்.

குருத்தெலும்பு கிழிவு மற்றும் குருத்தெலும்பு பற்றி மேலும் சில தகவல்கள்

நம் முழங்கால்களில் இரண்டு மெனிஸ்கிகள் (குருத்தெலும்புகள்) உள்ளன, அவை உங்கள் முழங்கால் மூட்டுக்கு அதிக உராய்வு ஏற்படாத வகையில் அதிர்வுகளைத் தாங்கும் பணியைச் செய்கின்றன. இவை கிழிந்து போகும் போது, மூட்டுகளில் வீக்கம் மற்றும் மூட்டு விறைப்புக்கு வழி வகுப்பதோடு வலியை யும் ஏற்படுத்துகிறது.

குருத்தெலும்பு கிழிவு என்பது குருத்தெலும்பு சேதங்களில் மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும், முழங்கால் தொடர்பான மற்ற காயங்களைப் போலவே, குருத்தெலும்பு கிழிவும் மிகவும் துன்பமும் வேதனையும் தருவதாக இருக்கும்.

நம் உடலில் இதன் பணி என்ன? முழங்கால் மூட்டுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு ஷாக் அப்சார்பர் போல இது செயல்படுகிறது. நடத்தல், ஓடுதல், குதித்தல் போன்றவற்றை நாம் செய்யும்போது ஏற்படும் அதிர்வுகளை ஏற்று அவற்றின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால் மூட்டுக்குப் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும், பொதுவாக ஏற்படும் தேய்மானங்களின் காரணமாக நம் எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

இது தவிர, கால்களின் எலும்புகளைத் (தொடை எலும்பு மற்றும் கணுக்கால் உள் எலும்பு) அணைத்தது போல இருக்கும் குருத்தெலும்பு மற்றும் திசுக்களுக்கு ஊட்டச்சத்து அனுப்ப இந்த அரை மதிக் குருத்தெலும்புகள் உதவுகின்றன. இந்தத் திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, திசு அழிவு மூட்டுவலியை சோதிப்பது எளிது.

குருத்தெலும்பு கிழிவை எவ்வாறு அறிவது?

குருத்தெலும்புக் கிழிவின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • முழங்கால் விறைப்பு மற்றும் வீக்கம்
  • முழங்காலில் வலி விட்டு விட்டு ஏற்படும் உணர்வு
  • முழங்காலை சுழற்றும் போது அல்லது முறுக்கும் போது வலி
  • முழங்காலை நகர்த்தும்போது அசைய இயலாமல் இருப்பது போன்ற உணர்வு
  • முழங்காலை நீட்டுவதில் சிக்கல்கள்

ஆரம்பத்தில், கடுமையான வலியை நீங்கள் உணராமல் கூடப் போகலாம். மேலும், காயத்துடன் விளையாட மற்றும் ஓடவும் இயலும். ஆனால் முழங்கால் வீக்கமடைந்தால், அதிக வலியை ஏற்பட ஆரம்பிக்கும்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

முழங்கால் வீக்கம் அல்லது வலி ஏற்பட்டால் அல்லது முழங்காலைச் சரியாக நகர்த்த முடியாவிட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருடனான சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள்

சந்திப்புக்கு முன்பதிவு செய்ய 1860-500-1066-ஐ அழைக்கவும்

குருத்தெலும்புக் கிழிவு ஏற்படக் காரணங்கள் யாவை?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விளையாடும் போது அல்லது ஏதேனும் எதிர்பாரா அதிர்வு ஏற்படுவதால் முழங்காலில் திடீரென முறுக்கு ஏற்படுதல் அல்லது முழங்கால் அதிகமாகத் திரும்புதல் போன்றவைக்கு வாய்ப்புண்டு. இந்நிலையில் கிழிவு ஏற்படக் கூடும்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, இத்தகைய காயங்கள் அதிகம் ஏற்படுகின்றன. மாறாக, இளையவர்களில், மெனிஸ்கி மிகவும் நெகிழ்வாக, வலுவாக ரப்பர்போன்று இருப்பதால், அவர்களுக்கு இந்தத் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவே.

வயதாகும்போது, மெனிஸ்கி பலவீனமடைந்து, தேய்ந்து காயங்களுக்கு அதிகம் ஆளாக நேரிடும். எனவே, உடற்பயிற்சியின் போது ஏற்படும் சிறிய பிறழ்வு கூட மெனிஸ்கல் கிழிவு ஏற்பட வழி வகுக்கும்.

சிலருக்கு, திசு அழிவு கீல்வாதம் கூட மெனிஸ்கல் கிழிவு ஏற்பட வழி வகுக்கும்.

விளையாட்டு சார்ந்த குருத்தெலும்புக் கிழிவு

விளையாட்டு சார்ந்த குருத்தெலும்புக் கிழிவுக்கான பொதுவான காரணங்கள் இங்கே:

·        முழங்கால் மூட்டின் முன் அல்லது பக்கவாட்டில் ஏற்படும் ஏதேனும் பாதிப்பு அல்லது அதிர்ச்சி, அதை ஒரு பக்கமாக நகர /விலக வழிவகுக்கிறது. இது இரண்டு மூட்டில் ஒன்றில் மெனிஸ்கி கிழிவு ஏற்பட வழிவகுக்கும். இத்தகைய காயங்கள் சில சந்தர்ப்பங்களில் ACL அல்லது முன்புற சிலுவை தசைநார் உடன் தொடர்புடையதாக இருக்கும். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், கால்பந்து அல்லது கூடைப்பந்து விளையாடும்போது இதுபோன்ற அதிர்ச்சியை நீங்கள் சந்திக்க நேரிடும்.

·         உங்கள் கால்களை மிகவும் விரைவாக மற்றும் வேகமாக நகர்த்தும்போது அல்லது உங்கள் முழங்காலை அதிகமாகச் சுழற்ற நேர்ந்தால், இச் சேதம் ஏற்படலாம். கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் இவ்விதமாகக் கால்களை அளவுக்கு அதிகமாகச் சுழற்றுவது மிகவும் பொதுவாக நடக்கும் ஒன்று.

·         சில நேரங்களில் முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் சமநிலை அற்ற அழுத்தம் இந்தச் சேதத்தை விளைவிக்கும். நீங்கள் சீரற்ற மேற்பரப்பில் ஓடுதல், தோப்புக் கரணம் அல்லது ஜாக் செய்யும் போது இப்படி நிகழலாம். இத்தகைய விபத்துக்கள் பொதுவாகக் கால்பந்து பயிற்சி மற்றும் கிராஸ் கண்ட்ரி ஓட்டத்தின் போது நேரலாம்.

·         முழங்காலில் திடீரென விரைவான மற்றும் எதிர்பாராத விசை தாக்கும் போது மூட்டு வெகுதூரம் நகர்ந்து மெனிஸ்கலைக் காயப்படுத்தலாம். கூடைப்பந்து விளையாட்டில் ஒரு வீரரின் முழங்கால் மற்றொரு வீரருடன் மோதி தாக்கத்தை ஏற்படுத்தும் சூழலில் இந்த வகை விபத்து ஏற்படக்கூடும்.

திசு அழிவு தொடர்பான குருத்தெலும்புக் கிழிவு

பின்வரும் திசு அழிவுக் காரணங்களால் குருத்தெலும்புக் கிழிவு ஏற்படலாம்:

·         வயது அதிகமாகும் போது குருத்தெலும்பு பலவீனமாகவும், குறைந்த நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கும். அதிர்வு மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட காயம் ஏற்படும் வாய்ப்பு இந்நிலையில் மிக அதிகம்.

·         உங்களுக்குக் கீல்வாதம் போன்ற திசு அழிவு மூட்டு வியாதி இருந்தால் அல்லது நீங்கள் தோப்புக் கரணம் போடுவது போல அமர்ந்து எழும் பயிற்சியை அதிகமாகச் செய்தால், இத்தாக்கம் வர அதிக ஆபத்து உள்ளது.

உங்கள் மருத்துவர் குருத்தெலும்புக் கிழிவை எவ்வாறு கண்டறிவார்?

உங்கள் மருத்துவர் காயம் குறித்த அனைத்து விவரங்களையும் உங்களிடம் கேட்டறிந்து, உங்களை முழுமையாகப் பரிசோதித்து, எலும்பு முறிவு ஏதேனும் உள்ளதா என்பதை அறிய எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கிறார். உங்கள் முழங்கால் குருத்தெலும்பு பற்றிய விரிவான மதிப்பீட்டிற்கு, எம்.ஆர்.ஐ (காந்த அதிர்வு இமேஜிங்) செய்யப் பரிந்துரைக்கக் கூடும்.

சில சந்தர்ப்பங்களில், உங்கள் முழங்காலின் நிலையை உள்பக்கமாகப் பார்க்க மருத்துவர் விரும்பலாம். இதற்கு, முழங்காலுக்கு அருகில் ஒரு சிறிய வெட்டு ஏற்படுத்தி ஆர்த்ரோஸ்கோப்பை (எலும்பியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்) பயன்படுத்தலாம்.

குருத்தெலும்புக் கிழிவுக்குச் சிகிச்சை முறை என்ன?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் காயம் ஏற்பட்டுள்ள, வகை, அளவு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து உங்கள் மருத்துவர் சிகிச்சையைத் தொடங்குவார். மூட்டுவலி காரணமாக இது ஏற்பட்டிருந்தால், சரியான சிகிச்சையால் இது சீராகும் வாய்ப்பு அதிகம். எனவே, துவக்கத்தில், உங்கள் மருத்துவர் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்க மாட்டார்.

வீக்கம் மற்றும் வலியைக் கட்டுக்குள் வைப்பதற்கு குருத்தெலும்புக் கிழிவுக்கான பொதுவான சிகிச்சை முக்கியத்துவம் அளிக்கிறது. இச் சிகிச்சை ரைஸ் (ஓய்வு, ஐஸ், அமுக்கம் மற்றும் ஏற்றம்) என்று அழைக்கப்படுகிறது. அதாவது:

ஓய்வு. ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்கவும், உங்கள் வலியை மோசமாக்கும் வகையில் கால்களை முறுக்குவது அல்லது சுழற்றுவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யாமல் இருக்கவும் என்று உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். வலி மிகவும் தீவிரமாக இருந்தால், ஊன்றுகோல் போன்ற துணை சாதனங்களைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கக் கூடும். இது உங்கள் முழங்கால்களில் அழுத்தத்தைக் குறைத்து, நீங்கள்  சிறப்பாக உணர உதவும்.

ஐஸ். விபத்து நடந்த இரண்டு நாட்களுக்கு, 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை 15 முதல் 30 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு ஐஸ் பையை கொண்டு ஒத்தடம் அளிக்க உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இது வலியைப் போக்க உதவும்.

அமுக்கம். வீக்கத்தையும் வலியையும் கட்டுக்குள் வைத்திருக்க, பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டு போட்டு, அதோடு மருந்துகளையும் (ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) எடுத்துக்கொள்ள உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

ஏற்றம். உங்கள் காலை உயரமாக வைத்திருப்பது உங்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றும் காலப்போக்கில் வலியின் தன்மையை குறைக்கும்.

இப்போது மற்ற சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

பிசியோதெரபி

உங்கள் மருத்துவர் உங்களுக்கு பிசியோதெரபி பரிந்துரைக்க அதிக வாய்ப்புள்ளது. இது உங்கள் முழங்கால் மற்றும் கால் தசைகளை வலுப்படுத்தவும், மூட்டுகளை நன்றாக உறுதிப்படுத்தவும் உதவும்.

அறுவை சிகிச்சை

அனைத்து மறுசீரமைப்புச் சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும், வலி மற்றும் பிற அறிகுறிகள் குறையவில்லை என்றால், உங்கள் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைக்கலாம். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கிழிந்த குருத்தெலும்புகளைச் சரிசெய்வது எளிது.

கிழிந்த குருத்தெலும்புகளைச் சரிசெய்ய முடியாவிட்டால், உங்கள் மருத்துவர் அதை அறுவை சிகிச்சை மூலம் ஒழுங்கமைக்க வாய்ப்புள்ளது. இந்தச் செயல்முறை ஆர்த்ரோஸ்கோபிக் ரிப்பேர் என்று அழைக்கப்படுகிறது.

திசு அழிவு கீல்வாதம் இதற்குக் காரணம் என்றால், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும் குருத்தெலும்புக் கிழிவு அறிகுறிகளைக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு (தீவிர மூட்டுவலி அறிகுறிகள் இல்லை என்றபட்சத்தில்), குருத்தெலும்பு மாற்று அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.

முடிவுரை

மெனிஸ்கல் கிழிவு மிகவும் பொதுவான ஒன்று. இருப்பினும், உங்கள் மருத்துவரை சரியான நேரத்தில் அணுகி அவரது பரிந்துரைகளைப் பின்பற்றி, சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், குருத்தெலும்புக் கிழிவு காரணமாக ஏற்படும் வலி மற்றும் உபாதையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருடனான சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள்

சந்திப்புக்கு முன்பதிவு செய்ய 1860-500-1066-ஐ அழைக்கவும்